பட்டீஸ்வரத்தில் சீர்திருத்தத் திருமணம். குடி அரசு - சொற்பொழிவு - 05.07.1931 

Rate this item
(0 votes)

சகோதரிகளே!சகோதரர்களே!!

இன்று நீங்கள் சுயமரியாதைத் திருமணம் எப்படி நடத்தப்பட்டதென்பதைப் பார்த்தீர்கள். இம்மாதிரியான விவாகங்கள்தான் முழு சுயமரியாதைத் திருமணங்களென்று கூறி விடமுடியாது. பெண்களுக்குப் போதிய அறிவில்லாதிருப்பதனாலும், அவர்களுக்குச் சுதந்திரமளிக்கப்படாதிருப்பதனாலுமே முழு சுயமரியாதை முறையில் திருமணம் என்பது நடைபெற முடியவில்லை. எப்பொழுது மணமகனால் மணமகளுக்கு கழுத்தில் தாலி கட்டப்பட்டதோ அது அடிமைத் தனத்தைத்தான் குறிப்பிடுகின்றது. நியாயமாகவே மணமகள் தாலிகட்டிக் கொள்ளத் தனது கழுத்தை அளித்தே யிருக்கக்கூடாது. மண மகளுக்குத் தாலி கட்டினால், மணமகனுக்கும் மணமகளால் தாலிகட்டப் படவேண்டும். புரோகிதமில்லாவிட்டாலும், புகைச்சலில்லா விட்டாலும் கூட, இந்த விவாகத்தில் "புரோகிதச்” செலவு குறைக்கப்பட்டிருப்பதாக நான் கருதுவதற்கில்லை 

சகோதரர்களே! நாம் பொதுவாக விவாகத்தைக்கூடக் கடவுளின் தலையிலேயே சுமத்தி விடுகின்றோம். " என்ன செய்வது! விவாகம் திடீரென கூடிவிட்டது! அந்தநேரம் (தாலிகழுத்துக்கு ஏறும் நேரம்) வந்துவிட்டால் யார்தான் என்ன செய்ய முடியு?” மென்பதாக உரைக்கின்றோமேயல்லாது, விவாகத்தின் உண்மைத்தத்துவத்தை அறிந்து நமது நாட்டில் விவாகங்கள் நடைபெறுவதாகப் புலப்படவில்லை. இருவருடைய சம்மதமுமின்றியே, அவர்களுடைய வயதையும் கவனியாமலும் கூட, "நாங்கள் செய்து வைக்கின்றோம். உனக்கென்ன கவலை வந்தது?" என்று சொல்லியேதான் அநேக விவாகங்கள் நமது நாட்டிலின்றும் நடைபெறுகின்றன. நாம் ஒரு விவாகம் செய்வதென்றால் தம்பதிகளின் அபிப்பிராயத்தையும், வயதையும், யோக்கியதையும் கவனியாமலே, புரோகிதர்களிடம் 4-அணா கொடுத்து, இருவருக்கும் பொருத்தம் சரியாயிருக்கின்றதா என்றுதான் கேட்டுத் தெரிந்து கொள்ளுகின்றோம். அவன் பணத்தை வாங்கிக்கொண்டு இருவருக்கும் பொருத்தமிருப்பதாகக் கூறிவிட்டால் உடனே விவாகமும் நடந்துவிடுகின்றது. நமது நாட்டிலுள்ள மூடப்பழக்க வழக்கங்களும், நிர்பந்தங்களும், சந்தேகங்களுமே இதற்குக் காரணமாகும். மேல்நாடுகளில் தம்பதிகளிருவரும் ஒருவரையொருவர் நன்றாய் அறிந்து, பழகிக்கொண்டு, இவர்களுக்குள்ளாக நிச்சயம் செய்துகொண்ட பிறகுதான், அவர்களுடைய பெற்றோர்களுக்குத் தெரியவரும். அவர்களுக்கு ஒருவித சடங்குகளு மில்லை. சர்ச்சுக்குப் போய் சாக்ஷிகளின் முன்னிலையில் ஒருவரையொ ருவர் விவாகம் செய்துகொள்ள சம்மதிப்பதாக எடுத்துரைத்து கையெழுத்து செய்துவிடுவார்கள். அவ்வளவேதான். இப்பொழுது நம்மை ஆண்டு கொண்டிருக்கும் நமது அரசரின் விவாகமும் அவ்விதமே தான் நடந்தது. 

இஸ்லாமானவர்களில் கூட, மாப்பிள்ளைப் பெண்ணைப்பார்க்கா விட்டாலும் கூட, ஒருவித சடங்குமில்லாமல் தங்களுடைய பந்துக்களின் முன்னிலையில், முல்லாக்களை வைத்துக்கொண்டு, தங்களுடைய விவாக ஒப்பந்தத்தை நிறைவேற்றிக்கொள்ளுவார்கள். உலகத்தில் 100க்கு 90 விவாகங்கள் இம்மாதிரியேதான் நடைபெறுகின்றன. நமக்குப் போதிய அறிவில்லாததால், அனேக கஷ்டங்களுக்குள்ளாகி, பலவித சடங்குகளை வைத்துக்கொண்டு, நெருப்பையும், அம்மியையும், குழவியையும் சட்டி பானைகளையும் சாக்ஷியாக வைத்துக்கொண்டு, உலக வாழ்க்கையை நடத்த ஆரம்பிக்கின்றோம். நாம் பெண்களை அடிமைகள் போல நடத்து கின்றோமேயன்றி, அவர்களை சமமாகவும், கூட்டாளிகளாகவும் பாவித்து நடத்துவதில்லை. அப்படிக்கொடுமைப்படுத்தப்பட்டாலும், விவாகத்தை ரத்து செய்துகொண்டு, விலகிக்கொள்ள இருவருக்கும் உரிமையில்லை. சிறிது நாட்களுக்கு முன்னதாகதான், பரோடா அரசாங்கம் “கல்யாணமான புருஷன் பெண்ஜாதி இருவருக்கும் தங்களில் யாருக்கு பிரியமில்லாவிட் டாலும், தங்களுடைய விவாக ஒப்பந்தத்தை ரத்து செய்து, விலகிக்கொள்ளலாமென்பதாக ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கின்றது. 

நமது நாட்டில், அடுத்த வீட்டுப் பெண்களும், பெற்றோரும் மண மகளுக்கு “மாமி வீட்டில் நீ நல்ல அடிமையாய் இரு. அடித்தாலும், உதைத் தாலும் வருத்தப்படாதே, புருஷன் மனம் கோணாமல் நட” என்று உபதேசம் செய்து, மணமகன் வீட்டுக்கு அனுப்புவதும் வழக்கமாயிருக் கின்றது. இதனுடைய கருத்து அவர்களை ஆடவர்களுக்கு எப்பொழுதும் அடிமைகளாகவும், ஒருவித சுதந்திரமாவது அல்லது உரிமையாவதில்லா திருக்கும்படி செய்வதற்கேயாகும். அவர்களுடைய உபதேசங்களைக் கேட்டு, மணமகன் வீட்டுக்குச் செல்லும் அந்தப்பெண்ணும் தன்னை ஓர் அடிமையென்றே கருதி, புருஷன், மாமனார், மாமி, நாத்தி இன்னுமிருக்கக் கூடிய பந்துக்களுக்கும் பயந்து, அவர்களுடைய பிரியத்தை சம்பாதிப்பதி லேயே தன்னுடைய வாழ்க்கையை நடாத்தி உயிருள்ள பிணமாக வாழ் கிறார்கள். அவர்கள் எவ்வளவுதான் உபத்திரவங்கள் அளித்தபோதிலும் அவைகளைப் பொருமையுடன் சகித்துக்கொள்ள வேண்டியவளாகிறாள். 

மேலும், நாம் கடன் வாங்கி, கலியாணங்கள் ஆடம்பரமாக செய்வ தினால் அவர்களுடைய தலையின் மீது அக்கடனையும் சுமத்தி விடுகிறோம். கடனை வைப்பதுமல்லாமல், அவர்களைத் தனி வாழ்க்கை நடத்தும்படியாக வேறாகவும் வைத்து விடுகிறோம். நாம் பக்கத்து வீட்டுக்காரர்களுக்குப் பயந்து கொண்டு, அதிக செலவு செய்வதினாலும், சடங்குகள் பல செய்வதினாலும் கடன் ஏற்பட்டு விடுகின்றது. இந்த யெண்ணம் மக்களைவிட்டு நீங்க வேண்டும். அதிலும் பெண்களை விட்டுத் தான் நீங்க வேண்டும். அப்படி நீங்குவதாக யிருந்தால் பெண்களின் அறிவு விருத்தியாக வேண்டும். உலகப் போக்கையனுசரித்து நடக்கும்படி அவர்களுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும். 

சிலவிடங்களில் சுயமரியாதைக் கலியாணத்திற்கு ஆண்கள் மட்டும் ஏராளமாய் வந்திருப்பார்கள். பெண்களோவெனில் 5 அல்லது 10 பெயர்கள் தான் வருவார்கள். பெண்கள் வந்தால் கெட்டுப்போவார்களாம்! இதற்குக் காரணம், நாம் அவர்களுக்கு உலக ஞானத்தையூட்டி,அறிவு புகட்டாதிருப் பதைத் தவிர்த்து வேறில்லை. ஆணுக்கும், பெண்ணுக்கும், வித்தியாச மில்லையெனவும், பெண்கள் அடிமைகள் அல்லவென்றும் அவர்கள் கருது வார்களானால், அப்பொழுது நகைகளும், ஆடைகளும் வேண்டுமென்றும் போராடுவதை அறவே விட்டுவிடுவார்கள். அவர்கள் தங்களைத் தாழ்ந்த வர்களெனக் கருதிக்கொண்டிருப்பதால்தான் தங்களை அழகுபடுத்திக் கொண்டு, ஆடவர்களை மயக்கவேண்டிய அவசியம் நேரிடுகின்றது. நமது பெண்களுக்கு, மேலும், குழந்தைகளை வளர்க்கும் முறைகளும் தெரியாது. குழந்தைகளுக்கு அறிவு, யூகம், சுதந்திர உணர்ச்சி ஆகியவைகளை யூட்டி வளர்க்க வேண்டும். குழந்தைகளுக்கு ஏதாகிலும் வியாதி வந்து விட்டால், நாம் உடனே மாரியம்மன் கோவிலுக்கும், ஐயர், பண்டாரம் ஆகியவர்களின் வீட்டுக்கும்தான் செல்லுகிறோமே யல்லாது, அவ்வியாதி ஏன் வந்தது என்பதை ஆராய்ந்து, அதற்குறிய மருந்துகளை அளிக்கும் வைத்தியர்களின் வீட்டுக்குச் செல்லுவதில்லை. சில இடங்களில், குழந்தை களின் வயிறு நிறைந்திருப்பதையும் அறிந்து கொள்ளாமல், அக்குழந்தை களின் வயிற்றை அமுக்கிப்பார்த்து அறிந்து கொள்ளுகிறார்கள். இவைகளுக்குக் காரணம் நமக்குப் போதிய கல்வியறிவும், தைரியமுமில்லா மையேயாகும். ஊரில் காலரா முதலிய நோய்கள் வந்தால், உடனே ஓங்காளியம்மனுக்குப் பொங்கலிடுவதிலும் “நாம் என்ன செய்யமுடியும்? அவனுடைய சீட்டு கிழிந்து விட்டது. போவது போய்தானே தீரும்” என்று சொல்லக் கூடியவர்களாகத் தானிருக்கிறோம். நாம் நமது அறிவை உபயோகப்படுத்தி நடந்தால், இத்தகைய கஷ்டங்களுக்கு ஆளாக வேண்டியதில்லை. 

நமது வாலிபர்கள் படித்த பெண்களைமட்டும் விவாகம் செய்து கொள்வதாக ஒரு வைராக்கியம் கொள்ளுவார்களேயாகில், அப்பொழுது பெண்களைப் பெற்றோர்கள், தங்களுடைய குழந்தைகளுக்கு கல்வியறிவை யூட்டுவார்கள். படித்த பெண்களாகப்படாவிட்டால் கலியாணம் செய்து கொள்ளாமலிருக்க வேண்டும். படியாத பெண்கள் கிழவர்களுக்கு 2ந் தாரம் 3ந்தாரமாக போய்சேரட்டும். இதுதான் படியாத பெண்களுக்கு தண்டனை யாகும். சில சுயமரியாதை விவாகங்களில், பெண்களுக்குத்தாலி கட்டும் வழக்கம் கிடையாது. முனிசிபாலிட்டிகளில் நாய்களுக்குக் கழுத்தில் பட்டை கட்டுவதைப் போல், விவாகமாகும் பெண்களுக்கு நாம் ஒரு தாலியை கட்டி விடுகின்றோம். அப்படி தாலி கட்டுவதாகயிருந்தால், மாப்பிள்ளைக்கும் சேர்த்துதான் கட்ட வேண்டும். எப்பொழுது மாப்பிள்ளை கட்டிக்கொள்ள சம்மதிக்கவில்லையோ, அப்பொழுது பெண்களும் தாலிக் கட்டிக்கொள்ள சம்மதிக்கக்கூடாது. தாலிகட்டுவது அடிமையுணர்ச்சியைத் தான் குறிக்கின்றது. 

பெண்களுக்கு நாம் அறிவையூட்டி சமத்துவத்தை அளித்துக் கொண்டு வரவேண்டும். அவர்களைப்பல கூட்டங்களுக்கும் அழைத்துச் செல்ல வேண்டும். அப்பொழுதுதான் அவர்களுடைய மூடநம்பிக்கைகள் நீங்கும். நமது பந்துக்கள் வரமாட்டார்களே யெனப் பயப்படக்கூடாது. ஜாதி யைப் பற்றி, நாம் கொஞ்சமும் கவலையடையக்கூடாது. நம்முடைய கொள்கைகளை ஆதரிப்பவர்களிடம் நாம் சம்பந்தம் செய்துகொள்ளலாம். எந்த ஜாதியாகயிருந்தபோதிலும் சரியே, அவர்களுக்கு அறிவு, யோக்கியதை முதலியவைகளிருந்தால் அவர்களிடம் சிநேகிக்கலாம். அறிவுக்கும், அனுபவத்துக்கும் ஒத்திருப்பவைகளை நாம் கவனித்து நடக்கவேண்டு மேயல்லாது பெரியவர்களின் பழக்க வழக்கங்களையே நாம் கண்மூடித்தனமாய் பின்பற்றலாகாது. இவைகள் யாவும் வாலிபர்களால் தான் நடைபெற வேண்டியிருக்கின்றது. வீண் ஆடம்பரங்களின்றியும், அதிக செலவில்லாமலும், சடங்குகளின்றியும் தம்பதிகளிருவரும் தங்களுடைய விவாகத்தை இரண்டு சாட்சிகளின் முன்னிலையில் ரிஜிஸ்தர் செய்து கொள்ளுவதே போதுமானது. 

குறிப்பு : 25.06.1931 இல் கும்பகோணம் பட்டீஸ்வத்தில் நடைபெற்ற திரு துரைசாமி - திருமதி காந்திமதி ஆகியோரின் திருமணத்தை நடத்தி வைத்து ஆற்றிய ரை. 

குடி அரசு - சொற்பொழிவு - 05.07.1931

Read 68 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.